Menu

அமைச்சுப் பதவியை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அனந்திக்கு முதலமைச்சர், அறிவுறுத்தல்

வட மாகாண அமைச்சரவையில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அமைச்சு பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வட மாகாண முதலமைச்சர் தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

 

நிதி குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.டெனீஸ்வரன் அமைச்சுப் பதவிகளிலிருந்து முதலமைச்சரினால் நீக்கப்பட்டதையடுத்து, டெனீஸ்வரனுக்கு உரிய அமைச்சுக்களின் விடயதானங்களில், போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் தம்வசம் எடுத்துக்கொண்டார்.

 

விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் மீன்பிடி அமைச்சும் இணைக்கப்பட்டு அமைச்சர் கந்தையா சிவனேசனுக்கு வழங்கப்பட்டது.

 

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் – தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றுடன் வர்த்தக வாணிபத்தையும் இணைத்து அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்றும், அந்த அமைச்சுக்களை பகிர்ந்து கொண்டவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய, டெனீஸ்வரன் மீண்டும் அமைச்சராகியுள்ளமையால், வட மாகாண அமைச்சரவையின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

மாகாணசபையில் 5 அமைச்சர்களே அங்கம் வகிக்க முடியும் என்பதனால், 5 அமைச்சர்கள் அடங்கிய விபரத்தை தமக்கு அறியத்தருமாறு முதலமைச்சரிடம் ஆளுநர் கோரியுள்ளார்.

 

இந்த நிலையில், முதலமைச்சர் தம்மை பதவி விலகுமாறு கோரினால் அந்த தருணத்திலேயே பதவி விலக தயாராக இருப்பதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

 

எனினும், இந்த விடயம் தொடர்பில் தாம் மேன்முறையீடு செய்யவுள்ள நிலையில் அமைச்சு பதவியை தொடர்ந்து முன்னெடுக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

1வது ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி.!!

இலங்கையுடனான முதலாவது ரி20 கிரிக்கெட்...

Leave a Reply

Right Menu Icon