Menu

விஜயகாவின் புலிகள் தொடர்பான செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்களிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

 

இது தொடர்பில், செய்தி வெளியிட்ட, தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

குறித்த அதிகாரிகள் குழு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு, வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

 

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் விசாரணைகள் சாதாரணமாக காணப்பட்டதுடன், அதிகாரிகளிடம் காணப்பட்ட அறிக்கைகள் மற்றும் விசாரணை விபரங்கள் சிங்கள மொழியில் இருந்தமையால், அவற்றை வாசித்து அறிந்துகொள்வதில் சிக்கல் காணப்பட்டதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 02ஆம் திகதி, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில், விஜயகலா சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சர்களான தலதா அதுகோரல, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகிய நால்வர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply