Menu

போதைப்பொருளை கட்டுப்படுத்த முப்படையினர் களத்தில்

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் நேரடி பங்களிப்பை பெற்றுக்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமையானது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒருபுறத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதனால் ஏற்படும் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையானது மக்களிடையே பாரிய அச்சத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

இந்தநிலையிலேயே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து முப்படையின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, முப்படையினருக்கு சட்டமா அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான விசேட ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்தச் சட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply