Menu

மன்னார் சதொசா வளாகத்தில் இன்றுடன் 90 மனித எச்சங்கள் மீட்பு..!!!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் 90 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இன்றும் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகளின் போது அப்பகுதியில் மனித எச்சங்கள் சில கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே

அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வுப்பணிகள் இன்றுடன் 55ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் சிலரும், தொல் பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 90 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 7 சிறுவர்களின் எச்சங்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சடலங்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

அகழ்வின் பின்னர் இது தொடர்பான பூரண அறிக்கையை மன்னார் நீதவான் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ராஜ் சோமதேவ மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon