Menu

பொது மக்களுக்காக வீடு தேடிச் சென்று அரச சேவை வழங்கும் புதுடில்லி

பொதுமக்களின் வீடு தேடி வந்து அரசாங்க சேவைகளை வழங்கும் புதிய திட்டம் டில்லி மாநில அரசால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

திருமண பதிவுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாரதி அனுமதிப்பத்திரம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த டில்லி மாநில அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது

 

அதன்படி டில்லி தலைமைச் செயலகத்தில் இந்தப் புதிய திட்டத்தினை மாநில முதலமைச்சர், கேஜரிவால் ஆரம்பித்து வைத்துள்ளார்.

 

இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் 1076 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தமக்கு வேண்டிய சேவைகளை கோரமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘மொபைல் ஸஹாயக்’ என்னும் நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களால் கோரப்பட்ட சேவைகள் அவர்களது வீடுகளுக்கே சென்று வழஙக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த சேவைகளுக்காக 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், காலை 8 மணி தொடக்கம், இரவு 10 மணி வரை இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கும் தலா 6 வீதம் ‘மொபைல் ஸஹாயக்’ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

பொதுமக்கள் இந்த சேவை குறித்த முறைப்பாடுகள், அல்லது கருத்துக்களை 1076 என்ற தொலைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆட்சி நடைமுறையில் பழைய சகாப்தம் முடிந்து புதிய சகாப்தம் ஆரம்பமாவதுடன், பொதுமக்கள் இனி அரசு சேவைகளுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவை இல்லை என டில்லி முதலமைச்சர் அர்விந் கெஸ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

அரச சேவைகள் பொதுமக்கள் இல்லம் தேடி வருவது உலகத்திலேயே இதுதான் முதன்முறை என அர்விந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon