Menu

ஆண்டு தோறும் உலகில் 8 லட்சம் பேர் தற்கொலை

வருடந்தோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதுடன், அதில், இளையோரே அதிகம் என உலக சுகாதார நிறுவனம், தெரிவித்துள்ளது.

 

சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல ஆணையகமும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.

 

அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதுடன், ஏழை , பணக்காரன் என அனைவரும் தற்கொலைக்கு தள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து வருவதுடன், சிலர், 20 தடவை வரை தற்கொலைக்கு முயன்று உயிரை மாய்த்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம் என்றும், அவர்களின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை பெருமளவில் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் விஷம் குடித்து உயிரை மாய்க்கின்றனர் என்றும் இது பெருமளவில், வருமானம் குறைந்த விவசாயக் குடும்பங்களிலேயே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேலும் பணக்கார நாடுகளில் மன அழுத்தம் காரணமாக அதிகளவானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் பெருமளவானோர், மது மற்றும் போதைப் பொருட்களினால் உயிரை மாய்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இதனை தடுப்பதற்கு மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

மேலும், தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon