Menu

ஜமால் கசோக்கியின் கொலைக்கு ஆதாரம் இல்லை என்கிறார்.!!

சவுதி ஊடகவியலாளர், ஜமால் கசோக்கியை கொல்வதற்கு சவுதி இளவரசர் உத்தரவிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சிஐஏ தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

புளோரிடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறையின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் வழங்கிய , ட்ரம்ப்,

பத்திரிகையாளர், ஜமாலை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் கொல்வதற்கு உத்தரவிட்டமைக்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த இறுதி முடிவுக்கு அவர்கள் இன்னும் வரவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை பிறரால் நிரூபிக்க முடியுமா? என்று தனக்குத் தெரியவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து உலக நாடுகள், சவுதி இளவரசர் சல்மானுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த நிலையில், மீண்டும் தனது ஆதரவை சவுதிக்கு; ட்ரம்ப் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரசாங்கத்தினை கடும் விமர்சனம் செய்து கட்டுரைகளை எழுதிவந்த பத்திரிகையாளர் கஷோக்கி, கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

 

ஜமால் கசோக்கிக்கும், அங்கிருந்த 15 பேருக்கும் இடையில், இடம்பெற்ற மோதலில் கஷோக்கி உயிரிழந்ததாக சவுதி தெரிவித்திருந்தது.

 

இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இந்தக் கொலையில், இளவசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்ட துருக்கி , குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது.

 

எனினும் இந்தக் குற்றச்சாட்டினை சவுதி மறுத்து வந்த நிலையில், கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவுதி கூறி வருகிறது.

 

இந்நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க சவுதி ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon